க்னோ

மும்பை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

 

மும்பை நகரில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே வனப் பகுதியில் உள்ள 2,600 மரங்களை வெட்ட அரசு முடிவு எடுத்தது.   ஆனால் இவற்றை வெட்டக்கூடாது எனத் தன்னார்வத் தொண்டு  நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களை நேற்று முன் தினம் மாலை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றம்  தனது தீர்ப்பில் மரங்கள் அடர்ந்த ஆரே காலனி ஒரு வனப்பகுதி அல்ல எனவும் நீதிமன்றம் கூறியதையடுத்து சில மணி நேரங்களில் நேற்று முன் தினம் ஆரோ காலனியில் நுழைந்த புல்டோசர்கள் மரங்களை வெட்டும் பணிகளைத் தொடங்கின.   மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அரசு ஆரே காலனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

லக்னோ நகரில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  ” ஆரே காலனி மரங்களை மெட்ரோ ரயில் பணிகளுக்காக  வெட்டுவதில் தவறில்லை; அந்தப் பகுதி ஒரு வனப்பகுதி அல்ல என உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது.     சட்டப்படி வனப்பகுதியை அழிப்பதுதான் தவறே தவிர மரங்களை வெட்டுவது தவறு இல்லை.

முன்பு டெல்லி நகரில் முதல் மெட்ரோ நிலையம் அமைப்பதற்காக 20 முதல் 25 மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது, இதற்கும் மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பத்தான் செய்தது.   ஆனால் நமக்கு வளர்ச்சிப் பணிகளும் முக்கியம் ஆகும்.   ஆகையால் இவ்வாறு வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன, தற்போது டெல்லியில் வனப்பகுதி அதிகரித்து பொதுப் போக்குவரத்து முறையும் மேம்பட்டுள்ளது ” எனத்  தெரிவித்துள்ளார்.