மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

டாஸ் வென்ற சி.எஸ்.கே., மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே முகேஷ் சௌதரி பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டை இழந்தது மும்பை அணி.

முன்றாவது ஓவரில் ப்ரேவிஸ் விக்கெட்டையும் முகேஷ் சௌதரி வீழ்த்திய நிலையில், 23 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து மும்பை அணி திணறியது.

பின்னர் ஆடிய சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹ்ரித்திக் ஷோகீன் ஆகியோர் நிதானமாக விளையாடி 20 ஓவரில் அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் என்ற நிலைக்கு எட்ட உதவினர், இதில் திலக் வர்மா 51 ரன்கள் எடுத்தார்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி மும்பையைப் போல் ஆரம்பத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் என்று திணறியது.

உத்தப்பா, ராயுடு ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்த நிதானமாக விளையாடினர்.

15.4 ஓவரில் 106 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்த போது களமிறங்கிய தோனி அணியின் வெற்றிக்காக விளையாடினார்.

கடைசி நான்கு பந்துகளில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 6-4-2-4 என்று கடைசி பந்து வரை பரபரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்தார் தோனி.