தர்மலிங்கம் கலையரசன் அவர்களின் முகநூல் பதிவு:
y
தொண்ணூறுகளில் இலங்கையில் வெளிவரத் தொடங்கிய தினமுரசு என்ற பத்திரிகை, புலம்பெயர்ந்த நாடுகளிலும் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தது.
அப்போது ஈபிடிபி தான் தினமுரசு வெளியிடுகின்றது என்ற விடயம் யாருக்கும் தெரியாது. அதில் ஒவ்வொரு முறையும் புலிகளை புகழ் பாடும் செய்திகள், கட்டுரைகள் இடம்பெறும். ஒருகாலத்தில், புலிகளும் அது தமக்கு ஆதரவான பத்திரிகை என்று எண்ணி ஏமாந்தது உண்மை தான்.
தினமுரசு ஆசிரியர் அற்புதனின் திறமையும், எழுத்தாற்றலும் தான் வெற்றிக்கு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக, “எக்ஸ்ரே ரிப்போர்ட்” என்ற தலைப்பின் கீழ், அவர் எழுதிய கட்டுரைகள் பலரால் விரும்பி வாசிக்கப் பட்டன.
புலிகளின் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை விவரித்து எழுதி இருப்பார். இவரை கூட்டிக் கொண்டு போய் பக்கத்தில் இருத்தி வைத்துக் கொண்டு தான், புலிகள் தாக்குதல் நடத்தியது போன்று எழுதி இருப்பார்.
உண்மையில் தினமுரசுக்கு கிடைத்த தகவல்கள், பெரும்பாலும் இராணுவ புலனாய்வுத் துறையிடம் இருந்து வந்தவை. ஈபிடிபியும் தனது உளவாளிகள் மூலம் தகவல்களை திரட்டி வந்தது. இதைத் தவிர அற்புதனின் கற்பனை வளமும் சிலநேரம் கைகொடுத்திருந்தது.
இதை இங்கே நினைவுகூரக் காரணம், இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாக இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்திலும், விக்கிலீக்ஸ் கூறுகின்றது என்றொரு கதையை பரப்பி வருகின்றனர். (அறிவாளிகளே! அது மே15 எழுதிய தகவல். போர் முடிந்தது மே 18 அன்று.)
விக்கிலீக்ஸ் தகவலை “ஆதாரமாக” வைத்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள சிலர் இப்படிக் கதை புனைகிறார்கள். “முல்லைத்தீவு கடலோரம் ஒரு போர்த்துகீசிய கோட்டை இருக்கிறதாம் (?). தலைவர் பிரபாகரனும், பொட்டம்மானும், அங்கிருந்த சுரங்கப் பாதையால் (?) தப்பி, அதிவிரைவு படகொன்றில் ஏறி மாயமாக மறைந்து விட்டார்களாம்…!”
சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை தான், “புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியோடிய கதை” கட்டி விட்டது. இந்தியாவும் அதற்கு உடந்தையாக இருந்தது. ஏனென்றால், பிரபாகரனின் மரணம் பற்றிய செய்தி, கலவரங்களை அல்லது வன்முறைகளை உண்டாக்கலாம் என்று எதிர்பார்த்தார்கள். அதே நேரம், ராஜபக்சே அரசு, போர்க்குற்றங்களில் இருந்து தான் தப்புவதற்கு, அந்தக் கதை உதவுமென்பதால் மறைமுகமாக ஊக்குவித்து வந்தது.
தினமுரசு வந்த காலத்தில், புலிகளின் தாக்குதல்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அலசும் அளவிற்கு புலனாய்வுத்துறை வளர்ந்திருந்தது. இறுதிப்போர் நடந்த காலத்திலும், அதற்குப் பிறகும், புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகளுக்குள் ஊடுருவி கட்டுப்படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல. புலிகளுக்கு ஆதரவாக பேசுவோர் எல்லாம் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் அல்ல.