விழுப்புரம்; ஸ்டாலின் பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என மின்கட்ட உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வீட்டு, வரி குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்ட நிலையில், மின் கட்டணமும் உயர்த்தி தமிழகஅரசு அறிவித்துள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக செயல்பட்டு வருகிறது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மின்கட்டண உயர்வுக்கு திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை போன்றவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில, மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 16ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து, இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசு பொறுப்பு ஏற்ற முதல் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கபெறவில்லை என்றவர், திமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் தான் அமோகமாக நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என திமுக ஆட்சியை குறை கூறியவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால் மக்கள் பல நன்மைகளை பெற்றனர், அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் தற்போது ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் பொம்மை முதலமைச்சராகவே மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று விமர்சித்தவர், தமிழகத்தை ஆட்சி செய்வது அவரின் மகனும், மருமகனும், மனைவியும்தான் என்றும், திமுகவின் குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மக்களின் பிரச்னைகளில் திமுக கவனம் செலுத்தவில்லை என்று காட்டமாக விமர்சித்ததுடன், திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு. திராவிட மாடல் என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து 15 மாத காலத்தில் மக்களுக்கு திமுக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஊழல்தான் நடைபெறுகிறது, தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.