கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டிக்கு இடையூறு விளைவித்ததால் ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு (OCA) சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டி சுமார் 30 நிமிடங்கள் தாமதமானதற்கு வழிவகுத்த ‘தவறான நிர்வாகம்’ குறித்து விளக்கம் கோரி ஒடிசா விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறை மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இடையூறு ஏற்பட்டதற்கான காரணத்திற்கான விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்கவும், அத்தகைய தவறுகளுக்குப் பொறுப்பான நபர்கள்/ஏஜென்சிகளை அடையாளம் காணவும் விளையாட்டு இயக்குநர் OCA-க்கு உத்தரவிட்டார்.

இந்த நோட்டீஸ் மீது 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து நிர்ணயித்த 305 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்திச் சென்ற போது 6.1 ஓவர்களில் 48 ரன்களில் போட்டி நிறுத்தப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸின் போது, ​​விளக்குகள் அணைந்ததால், சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. மின் தடை ஏற்பட்டதால், மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்த மின் தடைக்கான காரணத்தை விளக்கிய ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் (OCA) செயலாளர் சஞ்சய் பெஹெரா, “ஒவ்வொரு ஃப்ளட்லைட் கோபுரத்திலும் இரண்டு ஜெனரேட்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போட்டியின் போது, ​​பாதிக்கப்பட்ட ஃப்ளட்லைட் கோபுரத்திற்கான ஜெனரேட்டர்களில் ஒன்று பழுதடைந்தது.

இரண்டாவது ஜெனரேட்டருக்கு மாற்ற முயற்சித்தபோது, ​​வீரர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் ஒரு வாகனம் கோபுரத்திற்கும் ஜெனரேட்டருக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். மின்சார விநியோகத்தை மீட்டெடுப்பதற்கு முன்பு, ஓட்டுநரைத் தொடர்புகொண்டு வாகனத்தை நகர்த்தச் சொல்ல வேண்டியிருந்தது. இதனால் சிறிது காலதாமானது” என்று கூறியுள்ளார்.