சென்னை: போராட்டம் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அமைச்சர்கள், விசைத்தறியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியாயமான ஊதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருப்பூர் ஈரோடு, சேலம், கோவை பகுதிகளில் விசைத்தறிகள் முடங்கி, துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விசைத்தறியாளர்களின் கோரிக்கை பரிசீலித்து, அவர்களை பாதுகாக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர்கள், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி ஆகியோர், போராட்டத்துக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் உறுதி அளித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தின்மீது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. வேலை நிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தொழிலாளர்களுக்கு கூலி குறைத்து வழங்கப்படுவதாகவும் தெரிவித்தவர், கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தினார்.
இதற்கு பதில் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.