சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பவுர்ணமி தினம் என்பது, இந்து மத நம்பிக்கையின்படி, ஆண்டின் மிகவும் அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அன்றைய தினம், இறைவனை வழிபடுவதற்கும், மந்திரங்களை ஜபிப்பதற்கும் ஏற்ற நாள். திருவண்ணாமலை போன்ற புனித தலங்களில் கிரிவலம் வந்து, இறைவனின் அருளைப் பெறும் நாள். மேலும், புதிய செயல்களைத் தொடங்கவும், புதிய இலக்குகளை அமைக்கவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம் இந்து மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவதும் கிரிவலம் செய்வதும் வாடிக்கை.
இந்த நிலையில், பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்த திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதியும் (பங்குனி 11) பவுர்ணமி வருகின்றன. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.