கோவை
கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் பெரியாரின் சிலைகள் இருக்குமிடங்களில் எல்லாம் , சிலைகளுக்கு மலர் மாலைகள் சூடப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு அமைப்பினரும் பெரியாரின் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், ரவிக்குமார் என்ற இருவர் நகரின் இன்று பல்வேறு பகுதிகளில் பெரியாரை விமர்சிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும், அனுமதியின்றியும் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர். பெரியாரைத் தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது குறித்து காட்டூர் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, உடனடியாக பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகிய இருவரை காட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ரவிக்குமார் என்பவர் மூலம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தெரியவந்தது. இதையொட்டி பொது சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டிய ரவிக்குமார் என்ற நபரை அழைத்து விசாரித்த காவல்துறையினர் அவரை எச்சரித்து விடுவித்தனர். காவல்துறையினர் பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவரை மட்டும் கைது செய்து அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.