மதுரை: கடந்த சில மாதங்களாக பாஜக அண்ணாமலை இடையே மோதல் போக்குநீடித்து வந்தநிலையில், இந்த மோதல் தற்போது தீவிரமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கி உள்ளது. இதனால், மதுரை பரபரப்புடன் காணப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக அதிமுக இடையேயான உறவு முறிந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகிறார். இந்த விமர்சனமானது தற்போது எல்லை மீறிப்போய்கொண்டிருக்கிறது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் முதல் இளையவர்கள் வரை,  அண்ணாமலையை, கத்துக்குட்டி,  என்றும், ஆடு என்றும், பதவி வெறி பிடித்தவர் என்றும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பாஜவின் ஐடிவிங் நிர்வாகிகளையும் தங்களது கட்சிக்கு இழுத்துள்ளனர்.

இதனால் கடும் கோபத்தில் உள்ள அண்ணாமலையும், அதிமுக தலைவர்களை கடுமையாக சாடி வருகிறார்.  கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் சேலத்தின் பேசும்போது, அண்ணாமலைக்கு மைக் கிடைத்தால் போதும், எதையும் பேசுவார் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு அண்ணாமலை, எடப்பாடி ஒரு தற்குறி என்றும்  அவரைப்போல சுயநலவாதி நான் கிடையாது என்று விமர்சித்ததுடன், ஊர்ந்து, தவழ்ந்து, காலில் விழுந்து பதவிக்கு வந்த தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று விமர்சனம் செய்தார்.

இதன் காரணமாக, இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது.  எடப்பாடி உள்பட அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழிக்கு ஏற்ப அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவின் வரலாறு தெரியாமல் மன அழுத்ததால் அண்ணாமலை பேசி வருகிறார். பதவி வெறியால் என்ன பேசுகிறோம் என்பதை தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். ஆக்டோபஸ், அட்டைப்பூச்சியுடன் அண்ணாமலையை ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும்,

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததற்கு துப்பு கெட்ட அண்ணாமலை சீறி எழுந்தாரா? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததற்கு அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?

உங்களுடைய தகுதி தராதரம் பேச்சிலேயே தெரிகிறது. நிறைகுடம் தழும்பாது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் நிறைகுடம். நீங்கள் காலி தகர டப்பா. காலி டப்பா சத்தம் எழுப்பும், அந்த சத்தத்தினால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

பச்சை தமிழன் என சொல்லிக்கொண்டு, கர்நாடகாவில் சேவை செய்தபோது பச்சை துரோகியாக தமிழினத்தை கேவலமாக பேசியுள்ளார். நியமன பதவியில் இருந்துகொண்டு வாய்ச்சவடால் பேசும் அண்ணாமலை, சத்தமாக பேசினால் உண்மையாகி விடாது. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊமைகள் போலவும், இவர்தான் தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போலவும் வாய்ச்சவடால் எதற்கு?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலையின் பொய்கள் அனைத்தும் அம்பலமாகி விட்டதால் இதுபோன்று பேசி வருகிறார். அண்ணாமலையை மருத்துவமனையில் சேர்த்துவிட தயார். அதற்குரிய செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும் என்று கூறினார்.

இந்த நிலையில்,  இந்த மோதல் தற்போது மதுரை மாவட்டத்தில் போஸ்டர் யுத்தமாக மாறி உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தொண்டர்கள் மத்தியில் போஸ்டர் போர் ஏற்பட்டுள்ளது. இது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அண்ணாமலையை எச்சரிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆர்பி உதயகுமார் குறித்து தவறாக பேசினால் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்ன எச்சரிக்கிறோம் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் மதுரை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

கூழை கும்பிடு போட்ட ஆர்பி உதயகுமார் எங்கள் தன்மான தலைவரை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. அரசியலுக்கு வருமுன் ரேஷன் அரிசி கடத்தியது நினைவில்லையா? நீங்கள் அமைச்சராக இருந்தபோது பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடத்திற்கு இலவசமாக வழங்க வேண்டிய டிவியில் செய்த ஊழல் நினைவில்லையா? திமுகவுடன் வைத்திருக்கும் கள்ள உறவை நிரூபிக்க வேண்டுமா? ஊழல் பெருச்சாளியே, எங்கள் ஊரை விட்டு ஓடிப் போய்விடு. ஐந்து ரூபாய் பிஸ்கட் சோப்பு டப்பா உதயகுமார் ஊழல்கள் மேலும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை மற்றும் அதிமுக இடையே போஸ்டர் போர் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.