சென்னை:
தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது” என்று தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தபால்துறையில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை தமிழ் உள்ளிட்ட , அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென்று இந்தி- ஆங்கிலத்தில் மட்டுமே இனிமேல் தேர்வு என்று கூறி, மத்திய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ளவர்கள் யாரும் நுழைந்து விடக்கூடாது என்று சதி எண்ணத்துடன் திட்டமிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் தபால் துறை, மாநில மொழிகளை அலட்சிம் செய்யும் வகையில், செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள மின்வாரியத்தில் வட மாநிலத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள அதிமுக அரசைக் கட்டாயப்படுத்தி, விதிகளை மாற்ற வைத்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அகில இந்திய அளவில்- குறிப்பாக மத்திய அரசுத் துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு மொழி உரிமையின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பையும் தட்டிப்பறிப்பது ஓரவஞ்சகத்தின் ஒட்டு மொத்த வெளிப்பாடாக அமைந்துள்ளது. இந்தத் தேர்வு முறை தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த 2015-ல் நடைபெற்ற தபால் தேர்வில் தமிழ் தேர்வுகளில் பீஹார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் வெற்றி பெற்று – அதில் வரலாறு காணாத முறைகேடு நடைபெற்றது கண்டிபிடிக்கப்பட்ட போதிலும் இதுவரை அது தொடர்பான எந்த மேல் நடவடிக்கையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக தமிழில் தேர்வு எழுதுவதையே ரத்து செய்து, தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வயிற்றில் அடித்திருப்பது இந்திய ஒருமைப்பாட்டினைக் கட்டிக்காப்பாற்றும் உன்னதமான பாதையிலிருந்து மத்திய அரசே விலக்கிச் சென்று, அனைவரையும் தூண்டி விடுகிறதோ என்ற கவலையும் அச்சமும் ஏற்படுகிறது.
தமிழகத்தை மட்டுமின்றி, இந்தி பேசாத மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் மத்திய அரசு பணியில் சேர விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு, இது போன்று தேர்வு முறைகளை மாற்றி மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே குழப்பம் செய்வது மிகுந்த கண்டனத்திற்குரியது. தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மற்ற மாநிலங்களும் இந்திய அரசின் பணியிடங்களில் அமரவும் – அரசியல் சட்டம் தந்துள்ள இட ஒதுக்கீட்டுப் பயனை அடையவும் தகுதியானவர்கள் என்ற உரிமையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
ஆகவே “தபால் துறை தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படமாட்டா” என்ற சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழக இளைஞர்களும் மத்திய அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவைத் தாழிட்டு மூடும் போக்கை கைவிட்டு, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் கழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.