டில்லி,
மத்திய அரசால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து போஸ்ட் ஆபீசில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சலக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தபால் அலுவலகங்களில் இதுவரை ரூ.32,631 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக அஞ்சலக அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை தபால் அலுவலகத்திலும் பெறலாம் என்ற மத்திய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து மக்கள் தபால் அலுவலகத்திற்கும் படையெடுத்தனர். தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள், அடையாள அட்டைகளை காண்பித்து ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொண்டனர்.
இதற்கான காலக்கெடு கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இதுகுறித்து தபால் துறை, தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி சுதாகர் கூறியதாவது:-
தபால் அலுவலகங்களில் டெபாசிட் செய்யப்பட்ட மற்றும் மாற்றிக்கொடுக்கப்பட்ட தொகை குறித்து அவர் கூறிய தாவது,
நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமப்பகுதிகளிலும், 25,000 நகர்ப்பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தபால் அலுவலகங்கள் மூலமாக கடந்த 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ரூ.3,680 கோடி மதிப்புள்ள 5 கோடியே 78 லட்சம் எண்ணிக்கையிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளன.
மேலும், ரூ.32,631 கோடி மதிப்புள்ள 43 கோடியே 48 லட்சம் எண்ணிக்கையிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், தபால் அலுவலக கணக்குகளில் இருந்து ரூ.3,583 கோடி பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.