
புதுடெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஆவடி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களை ரயில் பாதைகளின் மூலம் இணைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, சாத்தியமிருந்தால் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இதுதொடர்பான கேள்வியை எழுப்பி, இந்த வழித்தடத்தில் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என்று பேசினார்.
அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், “சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும். புதிய ரயில் பாதைகளை அந்த வழித்தடத்தில் அமைப்பதற்கான சாத்தியங்கள் கண்டறியப்பட்டால், திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.
ஆவடி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகள் மிக முக்கியமான புறநகர் பகுதிகள். பல தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் அங்கே உளளன. தற்போதைய நிலையில் ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதையே கிடையாது.
எனவே, இந்த மூன்று முக்கியமான இடங்களும் இணைக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைவதோடு, மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.