கோவை: மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்து கல்வித்துறை அறிவித்து உள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி அறிவியல் ஆசிரியராக விஜய் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தலைமையாசிரியர் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், அதிருப்தி அடைந்த மாணவ மாணவிகள் பள்ளியின் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு பரபரப்பும் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து மாணாக்கர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.