ரோம்:

த்தோலிக்க தலைமை குருவான போப் பிரான்சிஸ், சாப்பிடும்போதாவது, அனைவரும் தங்களது செல்போன் களை தவிர்த்து விட்டு குடும்பத்தினரோடு கலந்துரையாடுங்கள் என்று மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே போன்களின் பயன்பாடு ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தனித்தனியாக செயல்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனால் குடும்ப உறவுகள் மட்டுமின்றி தேவையற்ற பிரச்சினைகளும் எழுகிறது. டிஜிட்டல் உலகின் அபரீதமான வளர்ச்சி, மக்களை அடிமையாக்கி உறவுப்பாலங்களை உடைத்து வருகின்றன. இன்றைய இளைய தலைமுறைக்கு உணவு தேவையோ இல்லையோ, ஆனால் போன் இருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செல்போன்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைக்கும் இன்றைய தலைமுறையினருக்கு கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்திற்கு இடையே நடைபெறும் புனித குடும்பத்தின் ஆண்டு விருந்து டிசம்பர் 30 அன்று கொண்டாடப்படுகிறது.  இந்த வழிபாட்டு கொண்டாட்டம் 17 ஆம் நூற்றாண்டில் நியூ பிரான்சின் முதல் பிஷப் செயிண்ட் ஃபிராங்கோயிஸ் டி லாவல் என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு வாடிக்கன் சிட்டியில்  நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ், செல்போன்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரையாற்றினார்.

அப்போது,  ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி ‘‘அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்’’ , அவர்கள் “ஜெபம் செய்தார்கள், வேலை செய்தார்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டனர்” என்று போப் பரிசுத்த குடும்பத்தைப் பற்றி கூறினார்.

“உங்கள் குடும்பத்தினருக்கு தொடர்பு கொள்ளத் தெரியுமா, அல்லது எல்லோரும் தங்கள் மொபைல் தொலைபேசி யில் அரட்டை அடிக்கும் உணவு மேஜைகளில் நீங்கள் அந்தக் குழந்தைகளைப் போல இருக்கிறீர்களா என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன் …என்றவர்,

‘‘நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்’’,

“தந்தைகள், பெற்றோர்கள், குழந்தைகள், தாத்தா, பாட்டி, சகோதர சகோதரிகள் – இது புனித குடும்ப நாளில் இன்றுமுதல்  மேற்கொள்ள வேண்டிய பணி இதுவேயாகும்”  என வேண்டுகோள் விடுத்தார்.