வாஷிங்டன்

வெளிநாட்டவர் நுழைய முடியாதபடி நாட்டை சுற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் சுவர் எழுப்ப உள்ளதை போப் ஆண்டவர் கண்டித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக எல்லை தாண்டி நாட்டுக்குள் குடி புகுந்து வருகின்றனர். அவ்வாறு வருபவரை தடுக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதில் ஒன்றாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மெக்சிகோ நகர எல்லையில் வெளிநாட்டவர் நுழையாமல் தடுக்க சுவர் எழுப்ப உள்ளார்.

இதைப் போலவே ஸ்பெயின் நாட்டிலும் எல்லையில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. சமீபத்தில் அகில உலக கத்தோலிக்க மத தலைவர் போப் ஆண்டவர் என அழைக்கப்படும் போப் ஃப்ரான்சிஸ் அமெரிக்கா வழியாக மொரோக்கோவில் இருந்து ரோமுக்கு திரும்பி சென்றார்.

அப்போத் போப் செய்தியாளர்களிடம், “மற்ற நாட்டவர் நுழைய முடியாதபடி நாட்டை சுற்றி சுவர் எழுப்புபவர்கள் தாங்கள் எழுப்பிய சுவர்களுக்கு இடையில் சிறைப்படுவார்கள். அவர்கள் சுவர்களை எழுப்பவில்லை. பயங்களை விதைக்கிறார்கள். இது சரித்திர பூர்வமான உண்மை.” என தெரிவித்துள்ளார்.

போப் ஃப்ரான்சிஸ் இதைப் போல நாட்டை சுற்றி சுவர் எழுப்புவதை ஏற்கனவே கடுமையாக தாக்கி உள்ளார். கடந்த 2016 ஆம் வருடம், “நாட்டில் தேவைப்படும் பாலங்களை கட்டாமல் நாட்டை சுற்றி சுவர் எழுப்புபவர் கிறித்துவரே அல்ல. இவர்கள் ஆண்டவன் அனுப்பிய நற்செய்திகள் அல்ல” என தாக்கி உள்ளர்.

இது குறித்து டிரம்ப், “நான் பதவிக்கு வந்தவுடன் போப்பை சந்தித்தேன். அப்போது அவர் வாடிகனை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்க உள்ளதாக நான் எச்சரிக்கை அளித்ததை பாராட்டினார். ஆனால் இப்போது அந்த நன்றியை மறந்து விட்டு பேசுகிறார்.” என தெரிவித்தார்.