ஹாரர், க்ரைம், வரலாற்று படம். ஆனால் குழப்பமின்றி, சிறப்பான திரைக்கதையுடன் நம்மை கட்டிப்போடுகிறது, பூசாண்டி வரான் திரைப்படம்.
முதல் விசயம்.. படக்குழுவினர் அனைவருக்கும் இரட்டைப் பாராட்டு.
சிறப்பான படம் என்பதோடு, படக்குழுவில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் மலேசிய கலைஞர்கள்.
தொல் பொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாளர்களா இருவர். மூவரும் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர்.
விளையாட்டாய் அவர்கள் பேயை அழைக்க, அந்த நேரம் அவர்களிடம் பழங்கால நாணயம் ஒன்று வந்து சேர அதன் பிறகு நடக்கிற ஹாரர், க்ரைம் விளையாட்டு. மூவரில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதற்கான காரணத்தைத் தேடி மீதமுள்ள இருவரும், பேய் ஆராய்ச்சியாளர் ஒருவரும் புறப்படுகிறார்கள்.
நான்கு காட்சிக்கு ஒரு காட்சி அதிர வைக்கிறது.. எதிர்பாராத ட்விஸ்ட்.
அதுவும், க்ளைமாக்ஸ்..ரகளை.
‘பூச்சாண்டி’ என்ற தலைப்பு கிடைக்காததால் பூசாண்டி என வைத்திருக்கிறார்கள்.
வெள்ளையர் ஆட்சிக்கு முன்பு வரை, சைவம், வைணவம் என்பதெல்லாம் வேறு வேறு மதங்களாக இருந்தன. சாக்தம், கௌமாரம், சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் இன்னும் ஏகப்பட்ட மதங்கள்!
இதையெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாத ஆங்கிலேயர்கள், அனைத்து மதங்களையும் இணைத்து இந்து என பெயரிட்டார்கள்.
வரலாற்றில் சைவ, வைணவ மோதல்கள் நிரம்ப உண்டு.
வைணவ மன்னன் ஒருவன், சைவ அடியார்களை கொடுமைப்படுத்துகிறார். நெற்றியில் திருநீறு பூசக்கூடாது என கட்டளை இடுகிறான். இதனால் உடல் முழுதும் திருநீறு பூசி நடமாடுகிறார்கள் சைவ அடியார்கள். இதனால் பூச்சாண்டி என அழைக்கப்பட்டனர்.
இதை நூலாக வைத்து, தற்கால கதையாக – பட்டாக – நெய்திருக்கிறார் இயக்குநர்.
தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், மிர்ச்சி ரமணா, கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிகையற்ற நடிப்பு.
ஒளிப்பதிவாளர் முகமதுஅலியின் மலேசிய ‘பார்வை’ அசத்துகிறது.
.
ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் படத்துக்கு கூடுதல் பலம்.
மலேசியாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக கொடுத்திருக்கிறார்கள். சிறப்பு.
பிரம்மாண்ட படமான, கமல்ஹாசனுடைய தசாவதாரம் கொடுத்த அதிர்வுகளை, சாதாரண பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கும் பூசாண்டி வரான் அளிக்கிறது. அத்தனை சிறப்பான திரைக்கதை.
படக்குழுவினர் அனைவரும் – ஒருவரைத் தவிர – மலேசியாவைச் சேர்ந்த, கலைஞர்கள்.
தமிழ்நாட்டு படத்துக்கு இணையாக, ரசிக்கத்தக்க வகையில் அளித்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் பாராட்டுகள்.
– டி.வி.சோமு