திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.,

ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.  இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் அதிகரித்து, முழு கொள்ளவை எட்டி வருகிறது.  திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 35அடி உயரம் கொண்ட  பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.

நேற்று ( 24ந்தேதி)  மாலை 5 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக பதிவாகி இருந்தது.  இதனால்,  பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இருந்தாலும்  பூண்டி ஏரிக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் இருந்து  இன்று மேலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போத 10,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், அணைக்கட்டு, ஐனப்பன்சத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.