சென்னை: தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக சிறப்பு முகாம்கள் மூலம் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
26 செப்டம்பர் 2021 நிலவரப்படி, தகுதியுள்ள மக்களில் 59% பேருக்கு கோவிட்19 தடுப்பூசியின் முதல் டோஸ் தடுப்பூசியையும், 19% தமிழ்நாட்டில் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் முதலாவதாக 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ள பகுதிகளாக தேர்வாகி பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் சாதனை செய்துள்ளது
தமிழகத்தில் முதல் நகராட்சியாக பூந்தமல்லி நகராட்சி தேர்வாகி உள்ளது. அங்கு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளது. முதல் தவணையான 49,042 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையும் போடப்பட்டு வருகிறது.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 100% தடுப்பு ஊசி செலுத்தி சாதனை செய்துள்ளது. இங்கு மொத்த மக்கள் தொகையில் 67,654 பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 100% இலக்கை அடைந்ததாக நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.