சென்னை: வாடிக்கையாளர்களிடம் கோல்டு பான்டு உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் கெள்ளை யடித்து தலைமறைவான கேரள பேஷன் ஜுவல்லரி நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை  திருப்பி தர முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், வளசரவாக்கம், புரசைவாக்கம் ஆகிய இடங்களில் இயங்கி வந்தது கேரளா பேஷன் ஜூவல்லரி. இந்த நிறுவனத்தின் தலைமையகம் கேரளாவில் உள்ளது.  இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து  தங்க நகை சேமிப்புத் திட்டங்களை கவர்ச்சிகரமாக அறிவித்து கோடிக்கணக்கனா பணத்தை சுருட்டியது. வாடிக்கையாளர்களுக்கு சீட்டு முடிந்ததும் பணத்தையோ, நகையையோ திரும்பி கொடுக்காததால், வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிறுவனத்தில், மொத்தம் 1638 பேர் இந்த நகை சேமிப்புத் திட்டத்தில் இணைந்து தங்கள் பணத்தையும் நகைகளையும் கட்டி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து1,638 பேரின் புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை,  கே.எப்.ஜே ஜுவல்லரி நிறுவனத்தின் பெயரிலும் நிர்வாக இயக்குனர் சுனில் செரியன் மற்றும் இயக்குனர் சுஜித் செரியன், மேலாளர் ஆகியோர் மீது தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இயக்குனர்களும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து, சொத்துக்களை விற்று வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தை  திரும்பத் தந்து விடுகிறோம் என்று பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் கேஎப் ஜே நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து,  கேஎஃப் ஜே நிர்வாகிகளுக்கு சொந்தமான சென்னையில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களை பறிமுதல் செய்து இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள, அந்த 2 சொகுசு பங்களாக்களில் தற்கால மதிப்பீட்டை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 1638 பேருக்கு அளிக்கவேண்டிய 106 கோடி ரூபாயை திரும்ப செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கேஎப்ஜே மேலாளரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.