கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்துப் பகிர்ந்துள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி வருகிறேன். வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.