துபாய்: மேன்கடிங் முறை குறித்து அஸ்வினின் கருத்து சரிதான் என்று இறங்கி வந்துள்ளார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கிப் பாண்டிங்.

கடந்த ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணியில் ஆடிய அஸ்வின், ராஜஸ்தான் வீரர் பட்லரை மேன்கடிங் முறையில் அவுட்டாக்கியதிலிருந்து, அவரைச் சுற்று அந்த சர்ச்சை சுழன்று வருகிறது.

தான் செய்தது கிரிக்கெட் விதியின்படி சரிதான் என்று தொடர்ந்து கூறிவருகிறார் அஸ்வின். இந்தமுறை டெல்லி அணிக்காக  அஸ்வின் ஆடவுள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ரிக்கிப் பாண்டிங், மேன்கடிங் முறைக்கு எதிரான ஒரு கருத்தை தெரிவித்தார்.

இது விவாதமான நிலையில், தற்போது பாண்டிங் கூறியுள்ளதாவது, “மேன்கடிங் விஷயத்தில் இருவரும் ஒரே எண்ணத்திலேயே உள்ளோம். கிரிக்கெட் விதிமுறைப்படியே தான் அவ்வாறு செய்ததாக கூறினார். அது சரியானதுதான்.

கடைசிப் பந்தில் எதிரணி 2 ரன்களே எடுக்க வேண்டுமென்ற நிலையில், ரன்னர் முனை பேட்ஸ்மேன் கிரீசைவிட்டு நகர்ந்து நின்றால் என்ன செய்வது? என்று அவர் கேட்பதில் நியாயம் உள்ளது. அதேசமயம், மேன்கடிங் செய்யாமல், ரன்கள் அபராதம் வழங்கும் நடைமுறையையும் நான் ஆதரிக்கிறேன். எனவே, இதுகுறித்து விவாதித்து ஒரு நல்ல முடிவு காண வேண்டும். இதை அப்படியே விட்டுவிடுதல் நல்லதல்ல” என்றார் அவர்.