சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு, பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பச்சரி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக டோக்கன் வழங்கும் பணி வருகின்ற நாளை முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், பரிசு பொருட்கள் தரமற்றவையாக இருந்ததால், கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இதையடுத்து, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, சர்க்கை உடன் ரூ.1000 ரொக்கம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரூபாய் 1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த டோக்கனில் எப்போது பொருட்களை பெற வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். அந்த தேதியில் குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவர் சென்று கைரேகை பதிவு செய்து பரிசுத்தொகுப்பை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஜனவரி 2ந்தேதி சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலினும், மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ரேசன் கடைகளில் கூட்டம் சேராத வகையில், டோக்கன் வழங்கும்படி நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேசன் கார்டுகள் விவரம்:
PHH -Priority Household (முன்னுரிமை குடும்பம் கார்டு)
PHH-AAY -Priority house hold- Antyodaya Anna Yojana ( அந்த்யோதயா அன்ன யோஜனா – முன்னுரிமை குடும்பம் கார்டு)
NPHH-Non Priority Household (ரேசன் பொருட்களுக்கு முன்னுரிமை இல்லாத குடும்பம்)
NPHH-S- Sugar (சர்க்கரை மட்டும் பெறுபவர்களுக்கான கார்டு)
NPHH-NC – No Commodity (ரேசன் உணவுப்பொருட்கள் தேவையற்றவர்கள் கார்டு)
என மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.