பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலிய எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் நாள் என்பதாக, தை மாதத்தையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும்.

என்றாலும் பார்ப்பனர் இதை மதத் தொடர்பு ஆக்குவதற்காக வேளாண்மை, வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முதன்மை ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து வேளாண்மையில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

அதே நேரம், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதற்கழகு.

– பெரியார் ஈ.வெ.ராமசாமி

[விடுதலை

புரட்டாசி 27, 2001 / 13-10-1970)