சென்னை,

பொங்கல் பண்டிகையன்று, விடுமுறை தினம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் அன்றைய நாளை, வேலையை புறக்கணிக்க தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பொங்கல் விடுமுறை தினம் பொதுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு,  ஊழியர்கள் நலக்குழு அதிகாரிகளே காரணம் என்றும்  ‌மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனம் புகார் தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளை தேசிய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு, தமிழர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.

இந்த அறிவிப்பால்,  மத்திய அரசின் நிர்வாகத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சனிக்கிழமை‌ விடுமுறை என்பதால் வேலைக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால், ரயில்வே, தபால்துறை போன்ற பொதுசேவைத்துறையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் அன்றைய தினம் பணியை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக சங்க தலைவர் துரைப்பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

இதேபோல தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளன செயலர் ராமமூர்த்தி, மத்திய அரசு ஊழியர்க ளுக்கான, பொங்கல் பண்டிகை விடுமுறை, கட்டாய விடுமுறையில் இருந்து, விருப்ப விடுமுறை யாக மாற்றப்பட்டு உள்ளது சரியானதல்ல என்றார்.

மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 11ம் தேதி தமிழகம் முழுவதும், உணவு இடைவேளையின் போது, தபால் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவர். 13ம் தேதி தலைமை தபால் அலுவலகம் முன், தொடர் முழக்க போராட்டம் நடக்கும். பொங்கலன்று பணி மறுப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.