புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் வேளாண் சட்ட நகலை முதலமைச்சர் நாராயணசாமி கிழித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் இன்று தொடங்கிய சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து மத்திய அரசு வழங்க வேண்டி அரசு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன் மொழிந்தார்.

அப்போது சட்டசபையில் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற கோரி விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லியில் போராடி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால உத்தரவு வழங்கி உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு இடம் அளிக்காமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. விவசாயிகளின் போராட்டம் காரணமாக 35 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் பிரதமர் மோடி பிரச்சாரத்துக்காக இங்கு வருவார்.

அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற, நாம் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பேசுவார். ஆனால், மாநில அந்தஸ்தை தடுத்து நிறுத்தியது மோடிதான் என்று கூறினார்.

அவையில் பேசியபடியே முதலமைச்சர் நாராயணசாமி, திடீரென வேளாண் சட்ட நகலை கையில் எடுத்துக் கிழித்து எறிந்தார். தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.