லந்தர்

வேளாண் சட்டங்களால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பஞ்சாப் விவசாயிகள் ஹேமா மாலினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு அலை கடுமையாக வீசி வருகிறது.  குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள் டில்லியில் சுமார் 50 நாட்களாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகளில் இதுவரை விவசாயிகள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளதால் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் பாஜக மக்களவை உறுப்பினரும் பிரபல நடிகையுமான ஹேமா மாலினி இந்த வேளாண் சட்டம் முழுக்க முழுக்க விவசாயிகள் நலனுக்காக இயற்றப்பட்டதாகவும் இதை சரியாக  புரிந்து கொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.  இது விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காந்தி கிசான் சங்கர்ஷ் கமிட்டி என்னும் விவசாய அமைப்பு ஹேமா மாலினிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “நீங்கள் வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்து கொள்ளவில்லை எனப் பேசியது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.  இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

நீங்கள் பஞ்சாப் மாநிலத்துக்கு வந்து வேளான் சட்டங்கள் எவ்வகையில் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் என்பதை விளக்கம் வேண்டும்.,  இதற்காக விவசாயிகளான நாங்கள் உங்களுக்குப் போக வர விமானக் கட்டணம், 5 நட்சத்திர ஓட்டலில் தக்கும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் ஏற்கத் தயாராக உள்ளோம்.  பஞ்சாபின் மைந்தர்கள் அனைவரும் இந்த சட்டங்களால் பஞ்சாப் அழியும் என்பதை அறிந்துள்ளனர்.

ஆனால் உங்களின் கருத்து அதற்கு நேர்மாறாக உள்ளது.  எனவே உங்களை வேளாண் சட்டம் விவசாயிகளைப் பாதிக்காது எனக்  கூறுவது எவ்விதம் என்பதை  விளக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம்.    இதற்காக உங்களுக்கு விமான கட்டணம், தங்கும் செலவு உள்ளிட்டவை எத்தனை ரூபாயாக இருந்தாலும் நாங்கள் ஏற்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.