டில்லி

ருணாசலப்பிரதேசத்தில் 101 வீடுகளைக் கொண்ட  ஒரு கிராமத்தை சீனா அமைத்துள்ளது செயற்கைக் கோள் புகைப்படம் மூலம் உறுதி ஆகி உள்ளது.

சீனா, பூடான் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் அருணாசலப் பிரதேசத்தில் உள்ளது,. இந்த பகுதிகளின் மூலம் சீனா அடிக்கடி இந்தியாவுக்குள் ஊடுருவல் நடத்தி வருகிறது.  இம்மாநிலத்தைச் சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.  இந்த எல்லையில் மக்களைக் குடியேற்ற சீனா கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது,.

இதையொட்டி எல்லை ஓரத்தில் சீனா கிராமத்தை அமைத்துள்ளதாகக் கடந்த நவம்பர் மாதம் செய்திகள் வெளியாகின.  தற்போது சீனாவில் இந்த கிராமம் அமைக்கப்பட்டதைச் செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.  இந்த கிராமம் டிசாரி சூ என்னும் நதிக்கரையில் மேல் சுபான்சிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருவது தெரிந்ததே.

இந்த கிராமம் இமயமலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது.  செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் இந்த கிராமத்தில் 101 வீடுகள் உள்ளது தெரிய வந்துள்ளது.,  கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில் இந்த கிராமம் தென்படவில்லை.  ஆனால் நவம்பர் 2020 இல் வெளியான புகைப்படத்தில் கிராம உள்ளதால் இந்த கிராமம் கடந்த வருடம் கட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த புகைப்படம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான போது அருணாசலப் பிரதேச பாஜக மக்களவை உறுப்பினர் தபிர் காவ் சீன ஊடுருவல் மாநிலத்தில் உள்ளதை ஏற்கனவே தாம் எச்சரித்ததாகத் தெரிவித்ததைக் குறிப்பிட்டார்.  அத்துடன் ஒரு பாலம் சீனர்களால் அமைக்கப்பட்டிருந்ததையும்  அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அப்போது அந்த தகவல்களை மறுத்த மத்திய அரசு தற்போது கிராமம் அமைக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளது.