ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வழியாக சென்ற இரண்டு வெளிநாட்டு பெண்களை விசாரித்த போலீசார் அரசு உத்தரவுப் படி செயல்படுவதாக கூறி அவர்களின் ஆடை குறித்து விமர்சித்தனர்.

புதுச்சேரியின் ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு கலாச்சார படி ஆடை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று என்ற போதிலும் அங்குள்ள கடற்கரைகளுக்குச் செல்லும் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் இதுவரை இதுகுறித்து புகார் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.

ஹிஜாப் விவகாரம் துவங்கியது முதல் பல்வேறு மாநிலங்களில் ஆடை கட்டுப்பாடு குறித்த பேச்சு எழுந்து வருவதுடன் பெண்களுக்கு ஆடை சுதந்திரம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அரவிந்தர் ஆசிரமம் இருக்கும் பகுதிக்குள் ஆடை கட்டுப்பாடு இருப்பதாக போலீசார் ஒருவர் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், ஆசிரம நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் நகரின் பெரும்பாலான பகுதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி இவர்களின் அதிகாரம் எல்லை மீறுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.