விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இதையொட்டி, தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பு பணிகளை தேர்தல் அலுவலர்கள் தொடங்கி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக எம்எல்எ நா.புகழேந்தி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து,  அங்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம்  கடந்த ஜூன் 10-ந்தேதி வெளியிட்டது. அதன்படி நாளை (ஜூலை 10ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 13-ந் தேதி (சனிக்கிழமை) பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த  இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஆனாலும், ஆளும் கட்சியான தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சியாக உள்ள அ.தி.மு.க., மற்றும் தேமுதிக உள்பட சில கட்சிகள் தேர்தல் புறக்கணித்து இருப்பது விமர்சனங்களுக்காகி வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக, பாமக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.  இதனால்  தேர்தல்க ளம் அனல் பறந்தது. தேர்தல் விதிமுறைப்படி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி நேற்று (ஜுலை 8ந்தேதி)  மாலை 6 மணியுடன் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர்களை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க அங்கிருந்து வெளியேறினார்கள்.

இதைத்தொடர்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில், (விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி)  பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில்,  276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.  வாக்கு பதிவு செய்யும் வகையில்,   552 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு கருவிகள் 276-ம், வி.வி.பேட் கருவிகள் 276-ம் ஆக மொத்தம் 1,104 எண்ணிக்கையிலான எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த தேர்தலில், 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதிபெற்றவர்கள்.  இவர்களில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 962 பேர் ஆண்கள், 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 29 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற போலீசார், துணை ராணுவத்தினர், சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.