தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் இந்தாண்டு அக்டோபரில் தொடங்கும் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக, ஜூலை மாதம் முதல் வாக்குச் சாவடிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றும் தற்போது தமிழகத்தில் 68,400-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, 1,200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள சுமார் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்பட உள்ளது.

இதுதவிர, உயரமான கட்டிடங்கள், நகர்ப்புற குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களின் வசதிக்காக, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.