சென்னை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம்  (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, தவெக, நாம் தமிழர் என அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை சந்தித்து பேசியும், உறுதிமொழிகளை அள்ளிவீசியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  தேர்தல் ஆணையமும்  தேர்தல் நடத்துவதற்கான  ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் வாக்காளர் திருத்தம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில்,  தற்போது வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த  2024 மக்களவைத் தேர்தலின்போது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 68,000 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டன.   ஒரு வாக்குச் சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,  பெரிய வாக்குச்சாவடி கள் பிரிக்கப்பட்டு கூடுதலாக 6000 உயர்த்தி வாக்குச் சாவடிகள் என மொத்தம்  74,000ஆக மாற்ற தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அடுத்த ஒரு வாரத்திற்குள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்குச் சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.