பொள்ளாச்சி:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி இன்று பொள்ளாச்சி முழுவதும் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27), அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் வாரிசுகளும் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை கடுமையான பிரிவுகளில் தண்டிக்க கோரியும், முறையான விசாரணை நடத்த கோரியும் அனைத்துக் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். உணவகங்கள் தொடங்கி அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இதன் காரணமாக பொள்ளாச்சி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுஉள்ளனர். 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.