டில்லி:

பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் அதிகமான பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி   தேசிய மகளிர் ஆணையம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த  பெண்களை ஒரு கும்பல் சமூக வலைதளம் வலைவீசி மடக்கி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து,  அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த படுபாதக செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த பாலியல் புகார்  தொடர்பாக  சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்த குமார் (27) ஆகியோர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பலர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அரசியல் பின்புலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என குரல் எழுந்துள்ள நிலையில், இந்த குலைநடுங்கும் சம்பவங்கள்  குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்,  தமிழக அரசோ  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

இளம்பெண்களை சீரழித்த குற்றவாளிகளுக்கு எதிராக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.