அனுப்பர்பாளையம்:
அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் கார் விபத்தில் சிக்கியது. இதில் உடன் வந்த கல்லூரி மாணவி பலியானார்.
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி முதலாம் ஆண்டு படித்துவரும் பொள்ளாசி ஜெயராமனின் மகன் மற்றும் உடன் படிக்கும் இரண்டு மாணவர்கள், 4 மாணவிகள் ஆகிய 6 பேர் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகனன் பிரவீன் ஓட்டி வந்தார். காரில் அவருடன் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த மதன் என்பவரின் மகள் சுரேகா , கோவை சாய்பாபா காலனி மந்த்ரா , திருப்பூர் செட்டிபாளையம் பெரியநாயகி , கோவை ரத்தினபுரி சுவேதா , கோவை ரேஸ்கோர்ஸ் திலக் ஆகியோர் பயணம் செய்தனர்.
அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியன் மீது பயங்கரமாக மோதியது.
காரின் வேகம் காரணமாக சாலையின் மறுபுறம் பாய்ந்து, ஈரோட்டில் இருந்து கேரளா நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் உடன் வந்த மாணவி சுரேகா பலியானார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.