டெல்லி: அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் அறிவிப்பு தடைகோரிய வழக்கில், மத்தியஅரசு, இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது நிதியில் இருந்து பகுத்தறிவற்ற இலவசங்களை விநியோகிப்பதாக உறுதியளிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் பணத்தையும், இலவசங்களை வாரி வழங்கி வருகிறது. அத்துடன், ஆட்சிக்கு வந்தால், அதைத் தருவோம், இதைத் தருவோம் என ஏராளமான கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளையும், திட்டங்களையும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து, மக்களிடம் இருந்து வாக்குகளை பெற்று வருகிறது. பொதுமக்களுக்கும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு, தகுதியற்ற நபர்களை வெற்றி பெற வைப்பதால், நாட்டில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட தடை கோரி, பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்கு கின்றன. இதற்கான நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன. எனவே, இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் மீறி அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த கட்சியின் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து, இதுபோன்ற பகுத்தறிவற்ற முறையில் இலவச அறிவிப்புபளை வெளியிடுவது குறித்து, மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.