போடி சட்டசபை தொகுதி வேட்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது அவருடன் அவரது தாயார் பழனியம்மாள், மனைவி மற்றும் மருமகள் மற்றும் இளைய மகன் ஜெயபிரதீப், அவரின் மனைவி மற்றும் பெரியகுளம் அதிமுக வேட்பாளர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வாக்குப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்றார்.
பாமக தலைவர் திண்டிவனம், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மரகாதாம்பிகை ஆரம்பப்பள்ளியில் இன்று காலை பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், 7வது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளேன். நல்லாட்சியின் அடையாளம் என்பது மக்களின் முகத்தில் புன்னகை, மகிழ்ச்சி தெரியவேண்டும். அந்தவகையில் மக்கள் நிம்மதியாக உள்ளனர். உழவர்களின் பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படவேண்டும்.கல்வி செலவுகளை அரசே ஏற்கவேண்டும். சுகாதாரத்திற்கு ஒரு ரூபாய்கூட செலவிடக்கூடாது. நல்லாட்சி தொடரவேண்டும் என்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. கருத்துக்கணிப்புகள் கருத்து திணிப்புகளாக இருப்பதால் மக்கள் அதை பொருட்படுத்துவதில்லை.
விமர்சனங்கள் நாகரீகமாக, நயமாக, ரசிக்கதக்கவகையில் அமையவேண்டும். அண்ணாகாலம்வரை விமர்சனங்கள் நாகரீகமாக இருந்தது. இது தற்போது மாறி தனிநபர் தாக்குதலாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் அது தரம்தாழ்ந்துள்ளது. கட்சியின் கொள்கை, அதன் வழிமுறைகள், தேர்தல் அறிக்கைகளை விமர்சிக்கலாம். இதை இதை பேசவேண்டும். இதை இதை பேசக்கூடாது என்று அரசியல் கட்சிகள் கோட்பாடுகள் வகுக்கவேண்டும் என கூறினார்.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.
சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியாகவே இருக்கும். தேர்தல் முறையில் மாற்றம் தேவை. காந்தி சொல்வதை பின் பற்றும் விதமாக மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்க வேண்டும். வாக்கிற்குக் காசு வாங்கக் கூடாது என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
கோவை காமராஜர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி வாக்களித்தார்