சென்னை
வாரம் ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாகத் தமிழகத்தில் காவல்துறையினருக்கு வாரம், ஒரு நாள் விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறையினருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பல தமிழக அரசியல் கடி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: காவலர்கள் விடுமுறையின்றி பணியாற்றுவதால், அவர்கள் மன வேதனையும் மனச் சோர்வும் அடைந்தனர். பலர் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பல ஆண்டுகளாக அவர்கள் விடுத்துவந்த கோரிக்கையை ஏற்று, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது அறிவித்திருப்பது காவலர்களுக்கு இனிய செய்தியாகும். மேலும் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களிலும் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமக தலைவர் சரத்குமார்: காவலர்களின் மனச்சுமையைப் போக்கும் வகையில், அவர்கள் உடல் நலனைப் பேணுவதற்கும், குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பது காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. நாள்தோறும் குற்றவாளிகளுடன் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்ளும் காவல்துறையினருக்கு, அவர்களது பிறந்த நாள், திருமண நாட்களில் விடுமுறை வழங்கிட டிஜிபி உத்தரவிட்டிருப்பது அவர்கள் மேலும் உற்சாகமாக பணி செய்வதை ஊக்குவிக்கும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வளித்தல், அவர்களது மன அழுத்தத்தைப் போக்க ஆண்டுதோறும் இருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதித்தல், பெண் காவலர்களுக்கு முன்னுரிமை அளித்தல் என, பல்வேறு காவல்துறை சீர்த்திருத்த செயல்திட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்வைத்திருக்கிறது. அவற்றுள் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபுவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவல்துறையில் பணிபுரிபவர்களுக்குக் கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும் என காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது. மேலும் அவர்கள் வார ஓய்வுநாளில் விருப்பத்துடன் பணியாற்றினால் மிகைநேர ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதும், அவர்களின் பிறந்தநாளுக்கும், திருமண நாளுக்கும் விடுப்பு அளிக்க அறிவித்திருப்பதும் காவலர் பணிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும். எனவே இனிவரும் காலங்களில் தமிழக காவல்துறையினர் புத்துணர்வோடு ஊக்கம் பெற்று, காவல் பணியில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
எனக் கூறி உள்ளனர்,