சென்னை
திருவண்ணாமலையில் நடந்த விவசாயி மரணத்துக்கு காரணமான வங்கி மேலாளர், அடியாட்களை கைது செய்ய கட்சித்தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை போந்தல் கிராமத்தில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்த தாமதம் ஆனதால் ஞானசேகரன் என்னும் விவசாயியை வங்கியின் தனியார் வசூலிப்பாளர்கள் கொடுமை செய்ததும், அவரை பிடித்து கீழே தள்ளி அவர் மரணம் அடைந்ததும் தெரிந்ததே. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி ராமகிருஷ்ணன், “திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயி ஞான சேகரனை வங்கிக் கடனை உடனடியாக செலுத்தக் கேட்டு, அவரை கொடூரமாக தாக்கி, அவரது மரணத்துக்கு காரணமாக உள்ள தனியார் முகவர்கள், வங்கி அதிகாரிகள் ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. கடனை வசூலிக்க அராஜக நடவடிக்கையில் இறங்குவது மனித விரோத செயலாகும். ஞானசேகரனை தாக்கி அவரது இறப்புக்கு காரணமாக அடியாட்களையும், வங்கி அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், “விவசாயி ஞானசேகரன் கெஞ்சலை ஏற்காத வங்கியின் அதிகாரிகளால் அனுப்பப்பட்ட அடியாட்கள் அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். மயங்கிய ஞானசேகரன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரணம் அடைந்துள்ளார். வங்கி அதிகாரிகளின் இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது” என கூறி உள்ளார்.
பா ம க இளைஞர் அணி தலைவர் அன்புமணி, “கடன் வசூலிக்க வந்த குண்டர்கள் டிராக்டரை ஜப்தி செய்வதை தடுக்கச் சென்ற ஞானசேகரனை பிடித்து தள்ளி அவர் சுயநினைவை இழந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். விவசாயக்கடன்களை எவ்வளவு அரக்கத்தனத்துடன் வங்கிகள் வசூலிக்கின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. அறுவடை முடிந்ததும் கடனை திருப்பித் தருவதாக ஞானசேகரன் கெஞ்சியும், அவரை குண்டர்கள் கீழே தள்ளி மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளனர். காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து வங்கி நிர்வாகிகள் மீதும், அவர்கள் ஏவி விட்ட குண்டர்கள் மீதும் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும்” எனக் கூறி உள்ளார்.
ம தி மு க தலைவர் வைகோ, “வங்கி முகவர்களாக உள்ள இந்த ரவுடிக் கும்பல் விவசாயிகளைத் தாக்கி அவர்கள் மரணம் அடைவது கடும் கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வங்கிகளுடைய வாராகடன் ஆறு லட்சம் கோடிக்கும் மேல் உள்ளதாக கூறுகிறார். ஆனால் உண்மைநிலையைப் பார்த்தால் வங்கிகள் வாராக்கடனாக ரூ. 10 லட்சம் கோடி என மதிப்பிட்டு உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, உ..பி, மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசு அந்த வங்கி நிர்வாகத்திடமிருந்து ஞானசேகரன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வாங்கித் தர வேண்டும். ஞான சேகரன் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் கூறி உள்ளார்.
இதைத் தவிர பல நெட்டிசன்கள் இந்தக் கொடுமையை எதிர்த்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.