அரசியல் உலகில் வெற்றிபெற்ற பல பிரபலங்களுக்கு, அவரவருக்கென்று ஒரு தனிப்பட்ட சாதனை இருக்கும். நேருவுக்கு ஒரு சாதனை என்றால், இந்திராவுக்கு ஒன்று, ராஜீவ் காந்திக்கு ஒன்று. கருணாநிதிக்கு ஒரு சாதனை என்றால், எம்.ஜி.ஆருக்கு ஒன்று. ஜெயலலிதாவுக்கு ஒரு சாதனை என்றால், மம்தா பானர்ஜிக்கு ஒன்று மற்றும் மாயாவதிக்கு ஒன்று.
நாம் மேலே பார்த்த சில உதாரணங்கள், மத்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ தலைமைப் பதவிக்கு வந்தவர்கள். ஆனால், இந்த 2 நிலைகளிலும், தலைமைப் பதவிக்கு வராத சிலரும், தங்களுக்கென்று சில தனிப்பட்ட சாதனைகளை வைத்துள்ளனர்.
இந்திய அரசியலை மிக அடிப்படையாக படித்தவர்களுக்குக்கூட, பாபுஜி என்று அழைக்கப்பட்ட ஜெகஜீவன்ராமை தெரியாமல் இருக்கமுடியாது. தலித் சமூகத்திலிருந்து வந்து, இந்திய அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் உயர்வு கண்டு, தனிப்பட்ட அரசியல் சாதனைகளைப் புரிந்தவர்.
(தலித் சமூக அரசியல்வாதி என்ற வகையில், அம்பேத்கரையெல்லாம் அந்தப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவரெல்லாம் வேறு லெவல்! சாதாரண அரசியல்வாதியல்ல! அவர் ஒரு வரலாற்று அதிசயம்..! எனவே, அவரை விட்டுவிடுவோம்!)
ஜெகஜீவன்ராம், நீண்டகாலம், காங்கிரஸ் கட்சியின் பிரபல தலித் முகமாக விளங்கியவர். 1908ம் ஆண்டு பிறந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம், உயர்கல்விக்காக கொல்கத்தா பல்கலைக்குச் செல்கிறார். பீகார் மாநிலத்தில், தலித் சமூகத்திலிருந்து உயர் கல்விக்குச் சென்ற முதல் நபர் இந்த ஜெகஜீவன்ராம்தான்! 1936ம் ஆண்டே பீகார் மாநில சட்டசபைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் ஜெகஜீவன்ராம்.
அந்த காலம் தொடங்கி, அவர் இறக்கும் 1986ம் ஆண்டுவரையிலான அவரின் அரசியல் வாழ்க்கை, தொய்வின்றி தொடர்கிறது. இதுவும் ஒரு சாதனையே!
பிரதமர் நேருவுடன்…
கடந்த 1946ம் ஆண்டு, சுதந்திரத்திற்கு முன்பாக, ஜவஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுகிறது. அந்த அரசில், இந்தியாவிலேயே இளைய அமைச்சராக(38 வயது), ஜெகஜீவன்ராம், தொழிலாளர் துறைக்கு பொறுப்பேற்கிறார். இந்தியாவில் கேபினட் அமைச்சராகும் முதல் தலித் பிரதிநிதி. அப்போது முதல், 1979ம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்தான்; ஆனால் பல்வேறு துறைகளுக்கு மாறி மாறி…
என்னென்ன துறைகள்?
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திராவின் அமைச்சரவைகளில், அவர், தொழிலாளர் துறை, தகவல்தொடர்பு, போக்குவரத்து, ரயில்வே, வேலைவாய்ப்பு, மறுவாழ்வு, உணவு, வேளாண்மை, நீர்ப்பாசனம், ராணுவம் ஆகிய முக்கிய துறைகளுக்கு, பல்வேறு காலகட்டங்களில், மாறி மாறி பொறுப்பு வகித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்னவெனில், பசுமைப்புரட்சி நடைபெற்றபோது அவர் வேளாண்மை அமைச்சராக இருந்ததும், வங்கதேசம் எனும் ஒரு நாடு உருவாவதற்கு காரணமான 1971ம் ஆண்டின் இந்திய – பாகிஸ்தான் யுத்தத்தின்போது, இவர் ராணுவ அமைச்சராக இருந்ததும்தான். இப்படியான சில சிறப்பு அம்சங்கள் எல்லா அரசியல்வாதிகளின் வாழ்விலும் அமைந்துவிடுவதில்லை! அந்த வகையிலும் இவர் சாதனையாளர்!
மத்திய அமைச்சர் பதவியும் சாதனையும்!
இந்தியாவில் எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் கிடைக்காத ஒரு அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்ததை நாம் நிச்சயமாக மறந்துவிட முடியாது. கடந்த 1946ம் ஆண்டின் முதல் இந்திய அமைச்சரவைத் தொடங்கி, 1977-79 மொரார்ஜி தேசாயின் ஜனதா கூட்டணி அமைச்சரவை வரை, தொடர்ந்து (இந்திராவிடம் இருந்து விலகிய நேரத்தில் சில மாதங்கள் மட்டுமே இடைவெளி) கேபினட் அமைச்சராக இருந்திருக்கிறார். அதிலும், கடைசி 2 ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டும் இவருக்கு துணைப் பிரதமர் என்ற அந்தஸ்து! ஆகமொத்தம் 32 ஆண்டுகள் மத்திய அமைச்சரவை வாசம்..!
தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் மத்திய அமைச்சராக, இந்தியாவில் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் பதவி வகித்ததில்லை. கடந்த 1977ம் ஆண்டு ஜனதா அரசு பதவியேற்றபோதே, இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த 1964 மற்றும் 1966ம் ஆண்டுகளிலேயே பிரதமர் பதவிப் போட்டியில் இருந்து, 1966ம் ஆண்டு இந்திராவின் அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கு அந்த வாய்ப்பு வந்ததை யாரும் பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கவில்லை.
இவர், சில மாதங்களுக்கு துணைப் பிரதமர் ஆக்கப்பட்டார். பிறகு, அதையும் சரண் சிங்கிடம் இழக்க நேர்ந்தது. ராணுவ அமைச்சராகத் தொடர்ந்தார். அடுத்து மொரார்ஜின் அமைச்சரவைக் கவிழ்ந்தபோது, அப்போதும் இவருக்கான வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அதுவும் கைக்கூடவில்லை. 1977 மற்றும் 1979ம் ஆண்டுகளில், பிரதமராகும் முயற்சிகளில் இவரின் அணியினர் இறங்கினார்கள்தான். ஆனால், இந்திய ஜாதியச் சூழலில், ஒரு தலித், அதிகாரமிக்க உச்சப் பதவியை அடைய முடியவில்லை. குடியரசுத் தலைவர் போன்ற அலங்காரப் பதவிதான் அவர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.
பிரதமராகும் தனது முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து, ஜெகன்ஜீவன்ராமே வேதனையுடன் வெளிப்படையாக தெரிவித்தார்.
இவர் மேற்கொண்ட அரசியல் முடிவுகள்
பல்வேறு துறைகளுக்கு தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்ததோடு மட்டுமின்றி, பல்வேறான முக்கிய அரசு கமிட்டிகளில், பல பெரிய பொறுப்புகளும் இவரைத் தேடி வந்துள்ளன.
நேருவின் மரணத்திற்குப் பிறகான, காங்கிரஸ் உள்கட்சிப் பிரச்சினையில், இவர் பழைய தலைவர்களின்(சிண்டிகேட்) பக்கம் போகாமல், இந்திராவின் பக்கம்(இண்டிகேட்) நின்றதானது, இவரின் அரசியல் மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணம். இவர் மேற்கொண்டது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. அதன் விளைவாக, அடுத்த பல ஆண்டுகளுக்கு, இவர் சக்திவாய்ந்த மத்திய அமைச்சராக வலம்வர முடிந்தது.
இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை காலத்திலும், தொடர்ந்து அமைச்சராக இருந்த இவர், 1977ம் ஆண்டு, பொதுத்தேர்தல் நடப்பதற்கு சில காலத்திற்கு முன்னதாக காங்கிரசிலிருந்து விலகி, “ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்” என்ற புதிய கட்சியைத் துவக்கினார்.
1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், இவரின் கட்சி, அன்றைய ஜனதாக் கட்சி கூட்டணியில் இணைந்தது. இந்திராவிற்கு எதிரான அலையில், ஜனதாக் கூட்டணி வெல்லும் என்பதை இவர் சரியாகக் கணித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அந்தக் கூட்டணியில் தனக்கு பிரதமராகும் ஜாக்பாட் அடிக்கலாம் என்றும் அவர் யூகித்திருக்கலாம். அதனால்தான் ரிஸ்க் எடுத்து, நேரு குடும்பத்தைப் பகைக்கவும் செய்தார். அதை, அரசியல்ரீதியாக தவறு என்றும் சொல்லமுடியாதுதான்!
ஆனால், அவரின் ரிஸ்க், குறுகிய காலத்திற்கு துணைப் பிரதமர் என்ற சிறிய பிரமோஷனை மட்டுமே பெற்றுக் கொடுத்தது. நினைத்தபடி பிரதமராக முடியவில்லை.
பதவியேற்ற மூன்றாண்டுகளிலேயே, ஜனதா அரசு, இந்திராவின் இளைய மகன் சஞ்சய்காந்தி கட்டியம் கூறியதைப்போல் கவிழ்ந்தது. அடுத்து 1980ம் ஆண்டு தேர்தல் முடிந்தபிறகு, 1946ம் ஆண்டு தொடங்கிய அவரின் மைய அரசியல் வாழ்க்கையில், 33 ஆண்டுகள் கழித்து முதன்முறையாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார் ஜெகன்ஜீவன்ராம்.
இந்திராவுடனேயே தொடர்ந்து இருந்திருக்கும்பட்சத்தில், நிச்சயம் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தெல்லாம் கிடைத்திருக்க வாய்ப்பில்லைதான்.
சரண்சிங் பதவி விலகிய பின்னர், அன்றைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி, அரசமைக்கும் பொருட்டு, ஜெகஜீவன்ராமிற்கு ஒரு வாய்ப்பை வழங்குவார் என்ற தகவல்கள் உலவியதையும் மறுக்க முடியாது.
ஒரே தொகுதியிலிருந்து…
நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற 1952ம் ஆண்டிலிருந்து, 1984ம் ஆண்டுவரை (இவரின் கடைசித் தேர்தல்) நடைபெற்ற மொத்தம் 8 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பீகாரின் சஸாரம் தொகுதியிலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர். இதுவும்கூட ஒரு சாதனைதான்!
நழுவிய வாய்ப்பு?
தமிழகத்தின் குமாரமங்கலம் குடும்பத்திற்கு ஒரு அரசியல் சாதனை உண்டு. தாத்தா சுப்பராயன் நேருவின் அமைச்சரவையில் உறுப்பினராகவும், தந்தை மோகன் குமாரமங்கலம் இந்திராவின் அமைச்சரவையில் உறுப்பினராகவும், பேரன் ரங்கராஜன் குமாரமங்கலம் ராஜீவ்காந்தியின் அமைச்சரவையிலும் உறுப்பினராக இருந்ததுதான் அந்த சாதனை! இங்கேயும் 3 தலைமுறைகள்; அங்கேயும் 3 தலைமுறைகள்!
ஆனால், ஜெகஜீவன்ராம் விஷயத்தில் கதை சற்று வேறுமாதிரியானது. தந்தையின் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர், மகளின் அமைச்சரவையிலும் பயணத்தைத் தொடர்ந்தார். ஒருவேளை, காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்திருந்தால், 1984ம் ஆண்டில் பதவியேற்ற பேரனின் அமைச்சரவையிலும்கூட இவர் இடம்பிடித்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால், அதுவொரு பிரமாதமான அரசியல் சாதனையாக இருந்திருக்கும்! ஆனால், வரலாறு வேறுமாதிரியாக அமைந்துவிட்டது.
கடந்த 1946 தொடங்கி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமராதவர், 1980ம் ஆண்டு முதல் 1986 வரை, ஒரு மக்களவை உறுப்பினராக மட்டுமே இருந்துவிட்டு ஜூலை மாதம் 6ம் தேதி மறைந்தார்.
தலித் முன்னேற்றத்திற்காக பல அரசியல் நவடிக்கைகளை மேற்கொண்டவர், அம்பேத்கரின் பெளத்த மதமாற்றத்தை எதிர்த்தார் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டியுள்ளது.
அவரின் 34வது நினைவுநாளான இன்று(ஜூலை 6), அவர் செய்த சில அதிசயமான அரசியல் சாதனைகளை நினைவுகூர்வது பொருத்தமானது..!
– மதுரை மாயாண்டி