சென்னை
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் வெயிலில் வாடிய மூதாட்டிக்கு போக்குவரத்து காவலர் காலணி வாங்கிக் கொடுத்துள்ளார்.
சோழிங்கநல்லூர் சந்திப்பில் கடந்த 28-ம் தேதி பணியில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் ஜான்சன் புருஸ்லீ என்பவர் அவ்வழியே கடும் வெயிலில் நடந்து வந்த மூதாட்டியைப் பார்த்துள்ளார். அந்த மூதாட்டி வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்துள்ளார்.
ஜான்சன் புரூஸ்லீ அந்த மூதாட்டிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து, கையில் இருந்த ரூ.20 பணத்தைக் கொடுத்துள்ளார் காவலரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டி வெயில் அதிகமாக உள்ளதால் கால் மிகவும் சுடுவதாகக் கூறியுள்ளார். இதையொட்டி ஜான்சன் புருஸ்லீ சிறிது நேரத்தில் காலணி வாங்கி வந்து மூதாட்டிக்கு அளித்தார்.
மூதாட்டி இரு கைகூப்பி வணங்கி, ஆசி வழங்கி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டார். மேலும் அவர் மூதாட்டியிடம் “எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள். இங்குள்ள 2 சிக்னலில் தான் இருப்பேன்” என மூதாட்டியிடம் கூறி உள்ளார்.
காவலர் ஜான்சன் புருஸ்லீயின், நற்செயலை அறிந்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி, அவரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டி உள்ளார்.