சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒரு மாத காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வர ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திர பாபு மார்ச் 28ந்தேதி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 3 நாட்களுக்குள் சுமார் 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதை விற்பனை செய்ததாக 2034 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சை, குட்பா போன்ற போதைபொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. போதை பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடிமையாகவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெண் வன்கொடுமை உள்பட குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மார்ச் 28ந்தேதி அன்று ஆபரேசன் கஞ்சா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது, ஒரு மாத காலத்திற்குள் கஞ்சா விற்பனை அடியோடு ஒழிக்கப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்யப்படும் பகுதிகள், கல்லூரிகளை சுற்றி கண்காணிப்பு மற்றும் சிறுகடைகளில் பான்குட்கா போன்றவை விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன் பயனாக, சென்னை மதுரவாயலில் இரு சக்கர வாகனத்தில் 25 கிலோ கஞ்சா கடத்திய பிரபா என்கிற தக்காளி பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். விசாரணையில் பிரபாகரன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதேபோல், நெல்லை மாவட்டம் நாங்குநேரி நான்கு வழிச் சாலைப் பகுதியில் கஞ்சா தடுப்பு தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறுகால் குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனைத் தடுப்பு சோதனை மேலும் தீவிரமாகும் என்றும் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 28ந்தேதி முதல் மார்ச் 30ந்தேதி வரையிலான கடந்த 3 நாளில் மட்டும் சுமார் 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக 2034 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.