தப்பிச்சென்ற தொழிலாளர்கள்.. போலீசிடம் சிக்க வைத்த குழந்தை..


’கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?’

-இந்த கேள்விக்குக் கர்நாடக மாநிலம் போய் விடை தேடலாம்.

அங்குள்ள ஹாசன் பகுதியில் உள்ள காப்பி தோட்டத்தில் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.

ஊரடங்கில் ஓய்வு கிடைத்ததால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினர்.

எப்படிச் செல்வது?

காப்பி தோட்ட முதலாளியிடம் முறையிட்டனர்.

மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் டெம்போ வேனில் ஏற்றி அவர்களை ஊருக்கு அனுப்பத் திட்டமிட்டார், முதலாளி.

மளிகை பொருட்கள் நிரப்பப்பட்ட சாக்கு மூட்டைகளுக்கு இடையே ஒவ்வொருவராகத் திணிக்கப்பட்டனர்.

இரு குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருடன் அந்த வேன், குறுக்கு சந்து ,பொந்துகளில் நுழைந்து பல்லாரி புறப்பட்டது.

சிக்மகளூரு காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஐயர் மங்களூரு என்ற இடத்தில் சோதனை சாவடி அமைத்திருந்த போலீசார், வேனை மறித்தனர்.

‘’ வேன்ல என்னப்பா?’’ என்று போலீசார் கேட்க-

‘’உப்பு, புளி, மிளகாய் எஜமான்’’ என வேன் டிரைவர் சொல்லியுள்ளார்.

’’ரைட் .. ரைட்’’ என போலீசார் விசில் கொடுக்க முற்படும் வினாடியில் –

வேன் உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.

சுதாரித்த போலீஸ், வேனுக்குள் புகுந்து சோதனை போட்டார்கள்.

சாக்கு மூட்டைகள் மத்தியில் ஆங்காங்கே , தொழிலாளர்கள் சுருட்டி மடக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள்.

டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து, தொழிலாளர்களை மீண்டும் காப்பி தோட்டத்துக்கே அனுப்பி வைத்துள்ளனர், போலீசார்.

பாலுக்கு அழுத குழந்தைக்கு இனி காப்பியாவது கிடைக்குமா என்று தெரியவில்லை.

–  ஏழுமலை வெங்கடேசன்