சென்னை
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்கலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த அம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள ‘பி.என்.எஸ்.107’ சட்ட பிரிவின் கீழ் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறைக்கு மட்டுமே இருந்து வந்த இந்த அதிகாரம் புதிய சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி சென்னை மாநகர காவல்துறையினர் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர். இதுபோன்ற கொலை வழக்குகளில் கொலையாளிகள் ரூ.5 லட்சம் வரை கூலியாக பெற்றிருந்தால் அவர்களது ரூ.10 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் புதிய சட்டம் வழிவகுக்கிறது.
சென்னை மாநகர காவல் துறையினர் முதல் நடவடிக்கையாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.