பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப திருமண விழாவுக்காக சாலையின் நடுவே சட்ட விதிகளுக்கு புறம்பாக பேனர்களை வைத்திருந்தார். திருமண விழா முடிந்தும், பேனர் அகற்றப்படாமல் இருந்தது. கனடாவுக்கு செல்ல தேர்வு எழுதிவிட்டு, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த சுபஸ்ரீ மீது அந்த பேனர் விழ, நிலை தடுமாறிய சுபஸ்ரீ அருகில் வந்துக்கொண்டிருந்த தண்ணீர் லாரி முன்பு விழுந்தார். இதனால் லாரி அவர் மீது ஏறியதில் பலத்த காயமுற்ற சுபஸ்ரீ, பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்களின் எதிர்புகளை தொடர்ந்து, பேனர் அச்சடித்த நிறுவனத்திற்கு சீல் வைத்த அரசு அதிகாரிகள், அந்நிறுவனத்தினர் மீது வழக்கும் பதிவு செய்தனர். அத்தோடு ஜெயகோபால் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நேரில் ஆஜராகும் படி வீட்டிற்கு சென்று நோட்டீஸ் ஒட்டினர். அதன் பிறகு, ஜெயகோபால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஜெயகோபாலான் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர், அவர் தனது குடும்பத்தோடு எங்கு சென்றார் என்கிற தகவல் தெரியவில்லை.
13 நாட்கள் கடந்த நிலையில், தற்போது வரை ஜெயகோபாலை கைது செய்ய காவல்துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மீண்டும் அவரது வீட்டின் முன்பு சம்மன் நோட்டீஸை காவல்துறையினர் இன்று ஒட்டியுள்ளனர்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட காவல்துறையினர், ஜெயகோபாலை தப்ப வைக்க ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், துணை முதல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவராக ஜெயகோபால் இருப்பதால் அவரை கைது செய்ய காவல்துறையினர் தயங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.