சென்னை: சட்ட விதிகளின்படி செயல்படும் இரவு நேர கடைகள், உணவகங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில்  ஒருபோதும் தலையிடக் கூடாது என காவல்துறை யினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு  அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ன் படி 10க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 X 7 அனைத்து நாள்களிலும் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறைக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

அரசு ஆணை மற்றும் நீதிப் பேராணைகளை பின்பற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சில இடங்களில் காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாகப் புகார்கள் வந்துள்ளன.

எனவே சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில் குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது. அதேவேளையில் சட்ட விரோத செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால் சட்டப்படி அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.