திருவனந்தபுரம்

யாரையும் டா அல்லது டி போட்டு அழைக்கக்கூடாது என காவல்துறையினருக்குக் கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகக் கேரளாவில் காவல்துறையினர் பொதுமக்களை அவமரியாதையாக நடத்துவதாகவும் மரியாதை இல்லாமல் டா அல்லது டீ என அழைப்பதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.   கேரள உயர்நீதிமன்றத்தில் திருச்சூரைச் சேர்ந்த அனில் என்பவர் இது குறித்து ஒரு புகார் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “திருச்சூரில் கடை நடத்தி வரும் என்னையும் எனது மகளையும் காவல்துறையினர் கடையை மூடச் சொல்லி ஆபாசமாகத் திட்டினார்கள்.  அத்துடன் எங்களை டா, டி என அழத்துப் பேசினர்.  இதனால் எனக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அவமானம் ஏற்பட்டுள்ளது.: என முறையிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் விசாரித்தார்.

விசாரணையில் நீதிபதி, “கேரள காவல்துறை மீது சமீப காலமாக இது போன்ற புகார்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பொதுமக்களிடம் காவல்துறையினர் மிக மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்து கொள்ள கூடாது. யாரையும் ‘‘டா’’, ‘‘டி’’ போட்டு அழைக்க கூடாது. டிஜிபி அனைத்து காவலர்க்கும் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறினார்.