பிரசிலியா:

போதை கடத்தல் பேர்வழிகளுக்கு உதவிய கிளியை பிடித்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள் பிரேசில் போலீஸார்.


வடக்கு பிரேசிலில் விலா இர்மா துல்ஸ் என்ற பகுதியில் வாழும் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.
இதனால், அவர்கள் போதை பொருட்களை கடத்தும் தொழிலை செய்து வருகின்றனர்.

இப் பகுதியில் கடத்தல் தலைவனாக இருப்பவன் மனிதர்களை நம்பவில்லை போலும். போலீஸார் வந்தால் தகவல் சொல்ல கிளிக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்.

இப் பகுதியில் ரெய்டு நடத்த பிரேசில் போலீஸார் சென்றனர். அப்போது அவர்களைப் பார்த்ததும், போலீஸ்…போலீஸ் என்று அந்த கிளி கத்த தொடங்கியது.

இதனைக் கேட்ட கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோடினர். கடத்தல் காரர்களை கோட்டை விட்ட போலீஸார், வேவு பார்த்த கிளியை பிடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தனர்.

பேசும் கிளி என்பதால், கடத்தல் குறித்து அதனிடம் போலீஸார் கேள்விகளை கேட்டனர். எந்த கேள்விக்கும் அந்த கிளி பதில் அளிக்கவில்லை.
ஒன்றும் தெரியாததுபோல் அமைதியாகவே இருந்தது.

நொந்துபோன போலீஸார், அந்த கிளியை பக்கத்திலிருந்து மிருக காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.  3 மாதங்கள் அங்கேயே வைத்திருந்துவிட்டு, பின்னர் திறந்துவிடப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து பிரேசில் பத்திரிக்கையாளர் ஒருவர் கூறும்போது, போதைப் பொருட்கள் கடத்தல்காரர்கள் விலங்குகளை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல.

இவர்கள் முதலைகளையும் வளர்த்திருக்கிறார்கள். எதிரிகளை கொன்று முதலைகளுக்கு இரையாக்குவார்கள் என்ற தகவலும் உண்டு.

எனினும் இதனை கடத்தல் கும்பல் தலைவனின் மகன் மறுத்துள்ளார். இறந்தவர் உடலை முதலைகள் உண்ணாது என்று அவர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2008-ம் ஆண்டு இப் பகுதியில் ரெய்டு வந்த போலீஸார், 2 முதலைகளை கடத்தல் கும்பலிடமிருந்து மீட்டுள்ளனர்.