சென்னை:

பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசிய வழக்கில் போலீசாரால் தேடப்படும் நடிகர் எஸ்.வி.சேகர் பெசென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்வ சாதாரணமாக கலந்துகொண்டார். இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஏப்ரல் 19ம் தேதி பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் ஒரு கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து எஸ்.வி.சேகரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கின் முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் கடந் 24 நாட்களாக எஸ்.வி.சேகர் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருடன் எஸ்.வி. சேகர் சகஜமாக நின்று பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் மத்திய அமைச்சருடன் இருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.வி.சேகரின் உறவினர் தான் தமிழக தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன். இந்த அழுத்தம் காரணமாக தான் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்ய தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.