சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் கடந்த மாதம் 22-ம் தேதி ஈசிஆரில் உணவகம் நடத்தி வரும் தூண்டில் ராஜாவுக்கும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மகன் செல்வபாரதிக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பார் சூறையாடப்பட்டது. இதுகுறித்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகரும், நடிகருமான அஜய் வாண்டையார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த தூண்டில் ராஜாவை புனேவில் ஜூன் 4-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முதலில் சாதாரண அடிதடி வழக்கு என நினைத்த போலீஸார், விசாரணைக்கு பிறகு, இவர்கள் போதைப் பொருள் கடத்தல், பணமோசடி, நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

குறிப்பாக அதிமுக நிர்வாகி பிரசாத் மீது சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு நிலுவையில் இருந்தது. அந்த வழக்கில் பிரசாத்தை கைது செய்தனர்.

மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், கோவையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மணி துரை ஆகியோர் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அதில் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி., சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், வருமானவரித் துறை, ரயில்வே ஆகிய துறைகளில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.

இதுதவிர, அஜய் வாண்டையாருடன் சேர்ந்து வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், பெங்களூருவில் இருந்து கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரிடம் இருந்து கொகெய்ன் போதைப் பொருளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக குற்றவாளிகளின் செல்போன், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பிரசாத்திடம் இருந்து கொகெய்ன் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து தகவலை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படி தகவல் தராமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.