சென்னை:

ற்போது ரஜினி நடிக்கும் 2.0 படத்தைத் தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினி தற்போது நடித்துவரும் 2.0 படத்தை தயாரித்து வருவது லைக்கா நிறுவனம். இந்த நிறுவனத்தின் அறக்கட்டளை, இலங்கையில் 150 வீடுகள் கட்டி, வீடிழந்த தமிழர்களுக்கு அளிக்கப்போவதாகவும், அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் அறிவித்தது.

இந் நிகழ்ச்சியில் ரஜினி  கலந்துகொள்ளக்கூடாது என ராமதாஸ், வைகோ,   திருமாவளவன், வேல்முருகன், உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையேற்று ரஜினி, தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

அதே நேரம், “இலங்கை சென்று  ஈழத் தமிழர் பிரச்சினையையும், தமிழக மீனவர் தாக்கப்படும் பிரச்சினையையும் தீர்க்க விரும்பியதாக அறிக்கை வெளியிட்டார். அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் பஸில் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தங்களது போட்டி நிறுவனங்களின் ஆதாயத்துக்காக சிலர் ரஜினி பயணத்தை எதிர்த்ததாக லைக்கா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள லைக்கா நிறுவனத்தின் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.